டொல்பின் வதைக்கு எதிரான விபரண திரைப்படம் பற்றிய கண்ணோட்டம்.

 


     பொழுதுபோக்குத் திரைப்படங்கள் ஆக்கிரமித்துள்ள இன்றைய திரைச்சூழலில், அரிதாகவேனும் நல்ல ஆவணப்படங்களும் குறும்படங்களும் வெளிவரத்தான் செய்கின்றன. இவை பெரிதும் சமூக மாற்றங்களை அல்லது விழிப்புணர்வை வேண்டி நிற்பவை. வாளிலும் பார்க்கக் கூர்மையான, எழுதுகோலிலும் பார்க்க வலிமை யான, வெடிகுண்டிலும் பார்க்கச் சக்தியான ஆயுதங்களாகச் செயற் பட்டுப் பார்வையாளர்கள் மனதை அதிரவைப்பவை. இப்படியான ஒரு பாதிப்புக்கு என்னை ஆளாக் கிய ஓர் ஆவணப்படம் த கோவ் (The cove). யாழ்ப்பாணப் பல் கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் சமீபத் தில் நிகழ்ந்த ஆவணப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம் பார் வையாளர்களை நிலைகுலைய வைத்தது என்றால் மிகையில்லை.


 ஆங்கிலத்தில் 'cove' என்றால் ‘சிறுகுடா' என்று பொருள். மூன்றுபுறமும் பாறைகள் அல்லது மலை களால் சூழப்பெற்ற ஒடுங்கிய வாயைக் கொண்ட ஆழமற்ற ஒரு சிறு கடற்பகுதி என்று இதனைக் குறிப்பிடலாம்.


'த கோவ்' ஒரு யதார்த்த ஆவணத்திரைப்படம். இது, ஜப்பானில் தாய்ஜி (Taijl)
என்ற கடலோரக் கிராமத்தில் உள்ள சிறு குடாவில் அரசின் ஆதரவோடு மிகவும் இரகசியமாக நிகழ்ந்தேறும் டொல்பின் வேட்டையை வெளியுலகுக்கு அம்பலப்படுத்துகிறது. டொல்பின்கள் தமது இயல்பான வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாகத் துரத்திக் கொண்டு வரப்பட்டு, சிறுகுடாவுக்குள் அடைக்கப்பட்டு ஈவிரக்க மற்ற முறையில் கொல்லப்படுவதை மனதை உருக்கும் வகையில் உண்மைக் காட்சிகளால் சித்திரிக்கிறது. 

சிறந்த ஆவணப்படத்துக் குரிய 2010ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருது உட்படப் பல சர்வதேச விருதுகளைப் பெற்ற இப்படம், பார்வையாளர்களை டொல்பின் வதைக்கு எதிராகக் கிளர்வுறச் செய்கிறது.



நாம் 'ஓங்கில்' என்று அழைக்கும் உயிரினம் தான் டொல்பின்கள். திமிங்கிலங்கள் போன்று இவையும் கடலில் வாழுகின்ற பாலூட்டிகள். உலகில் ஏறத்தாழ 40 வகையான டொல்பின் இனங்கள் கண்டத் திட்டுகளை அண்டிய ஆழமற்ற கடற்பகுதிகளில் வாழுகின்றன. இலங்கையில் மன்னார் வளைகுடாவிலும், கற்பிட்டிக்குடாவிலும், திருகோணமலைக்கடலிலும் குறிப்பிட்ட காலப்பகுதிகளில் இவற்றைக் காணமுடியும். டொல்பின்களில் ஆறுகளில் வாழுகின்றவையும் உண்டு. இந்தியாவில் கங்கை, பிரம புத்திரா நதிகளிலும் பாகிஸ்தானில் சிந்துநதியிலும் காணப்படுகின்றன. ஆற்று டொல்பின்களால் பார்க்க முடியாது. இவற்றின் கண்களில் வில்லைகள் ஏனோ விருத்தியடையவில்லை. கங்கையில் நீர்மாசுபாடு காரணமாக டொல்பின்கள் அழிந்து வருகின்றன. இவை தொடர்பான விழிப்புணர்வை. ஏற்படுத்தும் நோக்கோடு இந்திய அரசு தனது தேசிய நீர் வாழ் விலங்காக டொல்பினை அறிவித்துள்ளது.


மனிதனுக்கு அடுத்தபடியாக மூளை வளர்ச்சியும் புத்திக் கூர்மையும் உள்ள விலங்குகளில் தரையில் சிம்பன்சிகள் இருப்பதைப் போன்று, கடலில் முன்னணி வகிப்பவை டொல்பின்கள்தான். தூங்கும்போதுகூட இவற்றின் பாதி மூளை விழிப்பாக இருக்கும். அந்த அளவுக்கு, சூழலை அறிந்து கொள்வதில் டொல்பின்கள் விழிப்புடன் இருக்கின்றன. மனிதர்களினால் கேட்க முடியாத மிக உயர்ந்த அதிர் வெண் உடைய ஒலி அலைகளை (0.25 - 200 கிலோ ஹேர்ட்ஸ் உருவாக்கி அனுப்பி எதிரொலிக்கச் செய்வதன் மூலம் (echolocation) மிகவிரைவாகவும் துல்லியமாகவும் சூழலை உய்த்துணர்ந்துகொள்கின்றன. டொல்பின்களுக்கு மனிதர்களில் இருப்பதைப் போன்ற குரல் நாண் இல்லை. தலைப்பகுதியின் உள்ளே இருக்கும் நாசிப்பைகள் (nasal sacs) ஒலிகளை உருவாக்கி அலை பரப்ப, பொருட்களில் பட்டுத் தெறித்துத் திரும்பி வரும் எதிரொலிகளை பற்கள் அலை ஈர்ப்பிகள் (antennae) போன்று வாங்கி மூளைக்கு அனுப்புகின்றன. கிட்டத்தட்ட இதனை ஒரு அல்ட்ரா சோனோகிராஃபி (ultra sonography) இயந்திரத்தின் செயற்பாட்டுக்கு ஒப்பிடலாம். இதன் மூலம் டொல்பின்கள் தம் மைச் சுற்றியுள்ள பிற உயிரினங்க ளின் உருவம், பருமன். நிலை கொண்டுள்ள தூரம், அசையும் வேகம், திசை மற்றும் அவ்வுயிரினங்களின் உள்ளுடற் பாகங்களைக் கூடப் பதிவு செய்து விடுகின்றன.


டொல்பின்களின் தொடர்பாடல் முறைமையும் திறமையானது. எல்லா


விலங்குகளும் தங்களுக்கிடையே ஏதோ ஒரு வகையான தொடர்பாடலைக் கொண்டிருக்கின்றன தான். ஆனால்

டொல்பின்கள் விதம்விதமான ஒலிகளை உருவாக்கி ஒரு மொழியைப் போன்று தங்களுக்கிடையே பேசிக் கொள்கின்றன. புதிய சொற்களை உருவாக்குவது போலப் புதுப்புது ஒலிகளை எழுப்பி உரையாடுகின்றன. புதிய டொல்பின்களைச் சந்திக்க நேர்ந்தால் சீழ்க்கை ஒலி எழுப்பி வாழ்த்துச் சொல்கின்றன. தொடர்ந்து தமது பால், வயது, உடல் நலம், எங்கிருந்து வருகின்றோம் என்பன போன்ற விபரங்களையெல்லாம் பரிமாறிக் கொள்கின்றன. இதைவிட ஆச்சரியம் என்னவெனில், மனிதர்கள் பேசுவதைப் புரிந்து கொண்டு, அதைப் பேசுவதற்கும் முயற்சிக்கின்றன என்பதுதான். இந்த உண்மையைச் சமீபத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கடலியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


ஏதோ பூர்வஜென்மத் தொடர்பு போன்று டொல்பின்கள் மனிதர்களுடன் உறவு கொள்வதில் அதீத ஆர்வம் காட்டுகின்றன. கடலில் மனிதர்கள் நீந்தும்போது மகிழ்ச்சியுடன் கூடவே நீந்தி வருகின்றன. சுறாக்கள் எதிர்ப்பட நேர்ந்தால் உடனடியாகவே மனிதர்களைச் சுற்றிப் பாதுகாப்பு வளையம் போல வரிசை கட்டிப் பாதுகாப்பு வழங்குகின்றன. சுறாக் கள் திரும்பிச் செல்லும் வரை, எத்தனை மணி நேரமானாலும் இந்தப் பாதுகாப்பை விலத்திக்கொள்வதில்லை. ஆனால் முகத்தில் தவழும் புன்சிரிப்புடன் ஒரு குழந்தையைப் போன்று மனிதர்களை வளையவரும் டொல்பின்களுக்கு மனிதர்களே பெரும் எதிரி என்பது தான் சோகம்.


டொல்பின்கள் அவற்றின் கூர்மையான அறிவுத்திறன் காரணமாக


நீர்விளையாட்டுகளுக்கு மனிதர்களினால் சுலபத்தில் பயிற்றுவிக்கக் கூடியதாய் உள்ளன. இதனால், உலகம் முழுவதும் டொல்பின் விளையாட்டு செல்வம் கொழிக்கும் தொழிலாக உருவெடுத்துள்ளது. ஜப்பான், தாய்ஜியில் மிகப் பிரமாண்டமான டொல்பின் விளையாட்டு அரங்கை நிர்மாணித்து உல்லாசப் பயணிகளைக் சுவர்ந்து வருகின்றது. இந்த விளையாட்டரங்கை ஒட்டிய சிறு குடாவில்தான் டொல்பின்கள் உயிருடன் பிடிக்கப்பட்டுப் பல்வேறு நாடுகளிலும் உள்ள நீர் விளையாட்டு மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு டொல்பின் 1,50,000 டொலர்கள் வரை விலை போகின்றது.



உயிருடன் பிடிக்கப்பட்டவை போக பல்லாயிரக்கணக்கான டொல்பின்கள் இறைச்சிக்காக துடிதுடிக்கக் கொல்லப்படுகின்றன. தாய்ஜி குடாவுக்குள் செல்லப் பொதுமக்களுக்கோ உல்லாசப் பயணிகளுக்கோ அனுமதி இல்லை. மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஜப்பான் அரசு ஒரு புறம் திமிங்கிலங்களை அழிவில் இருந்து காப்பாற்றுவதாக உலகுக்குக் காட்டிக்கொண்டு, மறுபுறம் சட்டத்தின் ஓட்டை வழியாக டொல்பின் வேட்டைக்கு ஊக்கமளித்து வருகின்றது. ஜப்பானின் இந்த இரட்டை வேடத்தை 'த கோல்’ அம்பலப்படுத்துகின்றது.


இத்திரைப்படம் உருவாகுவதற்குக் காரணமானவர்கள் இருவர். ஒருவர்


றிச்சாட்டு பாரி (Richard O' Barry). அமெரிக்காவைச் சேர்ந்த இவர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக டொல்பின்களைப் பயிற்றுவித்துத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடாத்தியவர். சொந்தமாக ஐந்து டொல்பின்களைத் தனது ஃபுளோரிடா பூங்காவில் வளர்த்துச் சாகசங்களை நிகழ்த்தியவர். மனிதனுடைய பணத்தாசைக்காக டொல்பின்கள் அவற்றின் இயல்பான வாழ்விடத்தில் இருந்து பிரித்துப் பயிற்றுவிக்கப்படும்போது சோர்வடைந்து மன அழுத்தத்துக்கு ஆளாகின்றன. ஒரு கட்டத்தில் இவர் வளர்த்த டொல்பின்களில் ஒன்று மன அழுத்தம் தாங்காது இவருடைய கைகளுக்குத் தானாகவே தவழ்ந்து வந்து மூச்சை அடக்கித் தற்கொலை செய்து கொள்கிறது. இந்தப் பரிதாபச் சம்பவம் இவரது கடந்த கால வாழ்வைத் தலைகீழாக மாற்றியது. அவரது கையில் இறந்து கிடந்த டொல்பினின் மன உணர்வைப் புரிந்து கொண்ட அவர் அன்றிலிருந்து பூங்காக்களில் சிறைப்பட்டிருக்கும் டொல்பின்களை விடுவிப்பதையும் டொல்பின்களைக் காப்பாற்றுவதையுமே நோக்காகக் கொண்டு இயங்கி வருகிறார்.


 திரைப்படத்தின் அடுத்த கர்த்தா, லூயி சைகோயோஸ் (Louie Psihoyos). படத்தின் இயக்குநரான இவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர். பிரபலமான நேஷனல் ஜியோ கிறஃபிக் (National Geographic) சஞ்சிகையின் முன்னாள் புகைப் படப்பிடிப்பாளர். பலவருடங்களாக நீரடிப் புகைப்படக் கலையில் தேர்ச்சிபெற்ற, கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய அறிவு நிரம்பிய ஒருவர். இவரைத் தற்செயலாக 'ஓ' பாரி' சந்திக்க நேர்ந்தபோதே இரு வரும் தாய்ஜிக்குச் சென்று டொல்பின்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை வெளி உலகிற்கு கொண்டுவர முடிவுசெய்தனர்.



  தாய்ஜிகுடா தடைசெய்யப்பட்ட பகுதி என்பதால் அங்கு நுழைவதோ,
படமாக்குவதோ இலேசான காரியமல்ல. ஒ பாரி ஏற்கனவே பல பூங்காக்களில் இரகசியமாக நுழைந்து டொல்பின்களை விடுவித்தவர். இதற்காகப் பலமுறை சிறை சென்று பிரபலமானவர். இதனால் தான் யார் என்பதை அறியாத வகையில் எப்போதுமே முகத்தை மறைத்தவாறே பயணம் செய்கிறார். பல்வேறு கண்காணிப்புகளையும் ஆபத்துகளையும் தாண்டி இரகசியமான முறையில் டொல்பின்களின் கொல் களத்துக்கு வந்து சேர்கின்றனர், அங்கு அவர்கள் காணும் காட்சிகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன.


ஆயிரக்கணக்கான டொல்பின்கள் கடலில் இருந்து படகுகளால் துரத்திவரப்பட்டு, சிறு குடாவுக்குள் திணிக்கப்பட்டு வலைகளினால் வேலியிடப்படுகின்றன. மோசமான ஒலிகளை எழுப்பி டொல்பின்கள் கிலி கொள்ளச் செய் யப்படுகின்றன. தவித்து அலையும் டொல்பின்களில் இருந்து முதலில் பயிற்சி நிலையங்களுக்கு அனுப்புவதற்கு தேவையான டொல்பின்கள் பிடிக்கப்படுகின்றன. எஞ்சிய டொல்பின்கள் கூரிய ஆயுதங்களால் கதறக் கதறக் கொல்லப்படுகின்றன. பெருக்கெடுத்தோடிய இரத்தத்தால் சிறுகுடா முழுவதுமே இரத்தக் கடல் போலச் சிவப்பாகிவிடுகின்றது. கண்ணால் கண்ட இக்காட்சியைக் கட்டுக்காவலையும் மீறி எப்படிப் படமாக்குவது என்பதே இருவருடைய கேள்வியும்.


உயிராபத்தை எதிர்நோக்கும் இந்த நடவடிக்கைக்காகத் துணிச்சலும் அர்ப்பணிப்பும் உள்ள ஒரு குழு தயார் செய்யப்படுகின்றது. ஆழ் கடல் சுழியோடுவதிலும் கடலடிப் புகைப்படக் கலையிலும் தேர்ச்சி பெற்றவர்கள் குழுவில் இணைக் கப்படுகின்றனர். விசேடமாக வடிவமைக்கப்பட்ட, நவீன உருமறைப்புப் படப்பிடிப்புக்கருவிகள் இரவு நேரத்தில் எவருக்கும் தெரியாத விதமாகப் பொருத்தப்பட்டு படம் பிடிக்கப்படுகின்றது. இப்படி, உயிரைப் பணயம் வைத்து உருவாக்கப்பட்டு உலகுக்கு அளிக்கப்பட்ட திரைப்படமே 'த கோவ்'. 'த கோவ்' திரைப்படத்தின் மூலம் டொல்பின்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்படுவதும், ஜப்பானிய அரசின் ஆதரவுடனேயே அது நிகழ்வதும் மாத்திரம் அல்லாமல் வேறு பிரச்சினைகளும் வெளிச்சத்துக்கு வந்தன. ஜப்பானியப் பாடசாலைச் சிறுவர்களுக்கு டொல்பின் மாமிசம் மதிய உணவாக வழங்கப்படவேண்டும் என்ற ஜப்பானிய அரசின் தீர்மானம் வெளியே தெரியவந்தது. இந்த மாமிசத்தில் மாசாக பாதரச நஞ்சு அபாயகரமான அளவையும் தாண்டிச் செறிந்திருப்பது தெரிய நேர்ந்தது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதுவுமே தெரியாத நிலையிலேயே ஜப்பானிய மக்கள் இருந்துள்ளார்கள் என்ற கசப்பான உண்மையையும் படம் பதிவு செய் துள்ளது.

2009ஆம் ஆண்டு இத்திரைப் படம் வெளியானபோது பௌத்தத் தின் உயர் அம்சங்களையெல்லாம் இழிவுபடுத்தும் வகையில் ஜப்பான் அரசு செயல்பட்டமையை அறிந்து உலகும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது ஜப்பான் அவமானத்தால் தலை குனிய நேரிட்டது.

ஆனால் குனிந்த தலையை நிமிர்த்தாமல் ஜப்பான் டொல்பின் வேட்டையை இன்றுவரை தொடர்ந்தவாறுதான் உள்ளது வேதனையான விடயம்.

Post a Comment

0 Comments